இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரத்தன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் (சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள்) நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தன் ஒளியை இழக்கும். ஒரு கருப்பு நிழல் சந்திரனை மெல்ல மெல்ல மறைக்கத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து அந்த கருப்பு நிழல் மறுபடியும் விலகி மெல்ல மெல்ல சந்திரன் தன் ஒளியை மீண்டும் பெறுகிறது.

சந்திர கிரக்ணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரிய கிரகணம் என்பது அமாவாசை அன்று நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டுதான். இவற்றில் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் காண முடியாது. வழக்கமாக கிரகணத்தின் போது கோயில் நடை அடைக்கப்படும். ஆனால் இன்று பங்குனி உத்திரம் என்பதால் கோயில் நடை அடைக்கப்படாது.

அந்த வகையில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி வரும். ஆனால் இன்று வரும் சந்திர கிரகணத்தின் போது பூமி முழுமையாக வராமல் பகுதியாக மட்டுமே வரும். எனவே இது பகுதி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை பெனும்பிரல் சந்திர கிரகணம் என கூறுவார்கள்.

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை சரியாக 10.24 மணிக்கு தொடங்கும். சுமார் 12 .43 மணியளவில் உச்சம் அடையும். பிற்பகல் 3.01 மணிக்கு கிரகணம் முடிகிறது. சந்திர கிரகணத்தின் மொத்த நேரம் 4.36 மணி நேரமாகும். பகல் நேரத்தில் கிரகணம் தோன்றுவதால் இந்தியாவில் இதனை காண முடியாது.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும். சந்திர கிரகணத்தை அடுத்து, 15 நாட்களில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.