இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆதலால் காதல் செய்வீர் படம் ஏன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல,அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் படம் வெளியானது. இப்படத்தில் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ், ஜெயபிரகாஷ், அர்ஜூனன், துளசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை நல்லு ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இளம் வயதினரிடையே இருக்கும் காதல், காமம், குழந்தைகளை பெற்றெடுத்து வீதியில் விட்டு செல்வது என பல விஷயங்களை இந்த படம் சிறப்பாக பேசியிருந்தது.

படத்தின் கடைசி காட்சி தான் படம் பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண் கலங்க வைத்திருக்கும். அப்படிப்பட்ட படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. இதுதொடர்பாக ஒரு நேர்காணல் ஒன்றில், “ஆதலால் காதல் செய்வீர் படம் ஒரு அற்புதமான திரைப்படம். அந்த படம் என்ன ஒரு அற்புதமான கருத்தை சொல்லியதோ, அந்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி சுசீந்திரனிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘அந்த நேரம் விஜய் நடித்த தலைவா படம் சில பிரச்சினைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விட்டது. அந்த படம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்தது. ஆனால் பிரச்சினை காரணமாக அடுத்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ஐ ஒட்டி வெளியாகலாம் என கூறப்பட்டது. அதுவும் இல்லை என ஆகஸ்ட் 13 ஆம் தேதி தெரிய வந்தது. இதனால் அடுத்த 2 நாட்களில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு விரும்பினர். இதனால் பெரிய விளம்பரம் இல்லாமல் ஆதலால் காதல் செய்வீர் வெளியானது.

கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்தி ரிலீஸ் செய்யலாம் என சொல்லி வெளியானது. அதற்கு அடுத்த வாரம் தலைவா படம் வெளியானது. ரெட் ஜெயன்ட் தான் தியேட்டரில் வெளியிட்டார்கள். அந்த ஒரு வாரம் முடிந்த பிறகு 20 ஆம் தேதி தலைவா படம் வெளியானதும் ஆதலால் காதல் செய்வீர் படத்தை தூக்கி விட்டார்கள் என சுசீந்திரன் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார்.