இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மேலும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களும் இன்று திரையரங்குகளுக்குப் படையெடுத்துள்ள நிலையில், மற்றொருபுறம் இன்றைய ஓடிடி ரிலீஸ் படங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களின் மாஸ் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்தப் படங்களின் லிஸ்ட்:

அயலான்:

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத் நடிப்பில் ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அயலான் திரைப்படம், குழந்தைகளை ஈர்த்து குடும்ப ஆடியன்ஸை திரையரங்குக்கு வரவைத்தது. கடந்த ஃபிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம், உலகம் முழுவதும் 96 கோடிகளை வசூலித்ததாகத் தகவல். இன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.

கேப்டன் மில்லர்:

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் 104.79 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது. இப்படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

குண்டூர் காரம்:

மகேஷ் பாபு நடிப்பில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. டோலிவுட் சினிமாவின் மாஸ் இயக்குநர்களில் இருவரான த்ரி விக்ரம் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 180 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படங்கள் தவிர, பரத் – ஜனனி நடித்த இப்படிக்கு காதல் ஆஹா தளத்தில், பாலிவுட்டில் பாக்‌ஷாக் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் என பிற மொழி திரைப்படங்களும் இன்று வெளியாகின்றன.