வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசு நிவாரண நிதி வழங்கிய நிலையில், அந்த தொகையை, ஈஎம்ஐக்காக கேரள கிராமிய வங்கி பிடித்தம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை ,சூரல்மலையில் கடந்த மாதம் 30 தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக மூன்று முறை எற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 420 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 119 பேர் மாயமாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமிலும், உறவினர் வீடுகளிலும், ஒருசிலர் அரசு கொடுத்துள்ள வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள அரசு உடனடி நிவாரண தொகையாக ரூ.10,000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
தொகை செலுத்தப்பட்ட உடனேயே கேரள கிராம வங்கி, சிலரது ஈஎம்ஐ தொகைக்காக, அந்த பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளது. வாழ்வாதாரம் உறவுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை, மேலும் அதிகாரிக்கும் வகையில் வங்கியின் நடவடிக்கை இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் அமைப்புகள் சார்பில் கல்பெட்டாவில் உள்ள கிராமிய வங்கியின் மண்டல அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருக்க வேண்டிய வங்கி நிர்வாகம், இப்படி வயிற்றில் அடிப்பதா என்று கேள்வி எழுப்பினர்.
பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தி, அவர்களிடம் வங்கி மேலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் அனைத்து கிராமிய வங்கி கிளைகள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி செலுத்தப்படும் என அறிவித்து, 3 பேருக்கு திருப்பி அளித்துள்ளனர். அதே நேரத்தில் பலருக்கு தொகை, வராததால், போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.