புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமாக பிஆர்டிசி சார்பில் உள்ளூர், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை 100 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என 200 ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் இவர்களுக்கும் மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், சம்பளம் கட்டுபடி ஆகவில்லை எனக்கூறி, நீண்ட நாட்களாகவே ஓட்டுநர்களும், நடத்துநர்களும் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்று, முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான புதுசேசரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத சம்பளத்தை ரூ.10,804ல் இருந்து, ரூ.16,796 ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஒப்பந்த நடத்துநர்களின் மாத சம்பளம் ரூ.10,656ல் இருந்து ரூ.16,585 ஆகவும் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட மாத சம்பளத்திற்கான ஆணையை, போக்குவரத்து துறை ஆணையரும், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான சிவக்குமாரிடம், முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
இந்த புதிய ஊதிய உய்வு, இந்த ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது, ஒப்பந்த ஓட்டுநர் நடத்துநர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.