17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டில் நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியாகும். இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது.

அசுர பலம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் இரு அணிகளும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் குஜராத் அணி களமிறங்கிய முதல் ஆண்டே கோப்பையைத் தட்டிச் சென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான அணிகள் அசுர பலத்துடன் உள்ளன. அவற்றில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக லக்னோ அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் 155 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் துல்லியமாக பந்து வீசி சர்வதேச கிரிக்கெட் உலகத்தையே தன்வசம் திருப்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவும் 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் மோதவுள்ளது. இரு அணிகளும் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் நான்கு போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டி மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.

நேருக்கு நேர்

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் நான்கு புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

லக்னோ அணியின் பலமாக தற்போது பார்க்கப்படுவது பந்து வீச்சுதான். கடந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணி சிறப்பாக பந்து வீசி வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் புதிய கேப்டன் சுப்மன் கில் எடுக்கும் முடிவுகளால் போட்டியை வென்ற வரலாறும் உள்ளது, அதேநேரத்தில் தோல்வியைச் சந்தித்த வரலாறும் உள்ளது. இன்றைய போட்டியில் எந்தமாதிரியான கேம் ப்ளேனுடன் வருகின்றனர் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.