McDonald buys all Israeli franchise: உலகளவில் மெக்டொனால்ட்சுக்கு எதிரான குரல் எழுந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள அனைத்து 225 ஃபிரான்ச்சைஸ் உணவகங்களை வாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ்:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகமான மெக்டொனால்ட்ஸ், உலகளவில் மிகவும் பிரபலமான உணவகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், மெக்டொனாட்ஸுக்கு எதிராக உலக அளவில் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை சொந்தமாக வாங்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 225 கடைகளில் பணிபுரியும் வேலையாட்களும் இனி மெக்டொனால்சின் ஊழியர்களாக செயல்பட உள்ளனர். எதற்காக மெக்டொனால்ட்சுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றும், இந்த தருணத்தில் இஸ்ரேலில் உள்ள கடைகளை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்த வந்த நிலையில், சில நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்தை சேர்ந்தவருக்கும் ஆதரவாக குரல் எழுப்பின.
எதிர்ப்புக் குரல்:
இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்ட்ஸ் ஃபிரான்ச்சைஸ் உரிமத்தை அலோன்யால் என்ற நிறுவனம் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவத்தினருக்கு இலவசமாக உணவுகளை வழங்கியது. இது பெரும் பேசும் பொருளானது. போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக மெக்டொனால்ட்ஸ் செயல்படுகிறது என விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.
குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் மெக்டொனால்ட்சுக்கு எதிராக குரல் கொடுத்தன. இதையடுத்து, மெக்டொனால்சுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு குரல் எழ ஆரம்பித்தது.
மெக்டொனால்டு ஒரு உலகளாவிய நிறுவனம். இந்நிறுவனமானது, உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளில் தனது நிறுவனங்களை ஃபிரான்ச்சைஸ் உரிமங்களை கொடுத்து செயல்பட அனுமதித்துள்ளன. ஃபிரான்ச்சைஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் உள்நாட்டில், தன்னாட்சி முறையில் செயல்படுகிறார்கள்.
கடைகள் வாங்கல்:
இந்நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கூறுகையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக மத்திய கிழக்கின் நாடுகளிலும், இதர பல நாடுகளிலும் வணிகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனையடுத்து, இஸ்ரேலில் உள்ள நிறுவனத்திடம் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை வாங்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அதன் ஃபிரான்ச்சைஸ் நிறுவனம் செயல்பட்டதன் விளைவாக, மெக்டொனால்ட்ஸுக்கு எதிராக குரல்கள் எழுந்த வந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஃபிரான்ச்சைஸ் கடைகளை நேரடியாக மெக்டொனால்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.
Also Read: Rich Person List: உலக பணக்காரர்கள் பட்டியல்; பெண்களில் யார் முதலிடம்; அம்பானி எந்த இடம்?