நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதை காணலாம்.
பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் ப்ரீதம் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோரும் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12) வெளியாகவுள்ளது.
மேரி கிறிஸ்துமஸ் ஏன் பார்க்க வேண்டும்?
மேரி கிறிஸ்துமஸ் படத்தில் தான் முதல்முறையாக கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஜோடி இணைந்துள்ளது. பலதரப்பட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த கத்ரீனா, சமீபத்தில் டைகர் 3 படத்தில் ஆக்ஷன் ஜானரில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதே போல் கடந்தாண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி முதன்முதலாக ஹீரோவாக மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்க்கும் போது இந்த ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் முந்தைய படமான ஆயுஷ்மான் குரானா நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதுன் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் அவரின் படங்களில் இடம் பெறும் த்ரில்லர் மற்றும் டார்க் காமெடிகள் இப்படத்தில் இடம்பெறுகிறது தெரிகிறது. முன்னணி நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதியுடன் ஸ்ரீராம் ராகவன் முதன்முறையாக இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
மேரி கிறிஸ்துமஸ் படத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் மற்றும் தின்னு ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதுவே தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ராதிகா ஆப்தே மற்றும் அஷ்வினி கல்சேகர் இந்தி, தமிழ் மொழி படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்தி மற்றும் தமிழில் தனித்தனியாக வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ஒரு சிக்கலான கதைக்களத்தின் ட்விஸ்டை அவிழ்க்காமல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஆல்பர்ட்டாக நடித்துள்ள விஜய் சேதுபதி மற்றும் மரியாவாக நடித்திருக்கும் கத்ரீனா கிறிஸ்துமஸ் நாளின் நள்ளிரவில் தற்செயலாக சந்திக்கிறார்கள். அந்த இரவை ஒன்றாகக் கழிக்க விரும்பும் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ப்ரீதமின் பின்னணி இசை அதிகம் கவரும் என கூறப்படுகிறது. மேலும் நாசர் தெரி டூஃபன், பாப்போன் பாடிய ஒரு காதல் பாடல் விஜய் மற்றும் கத்ரீனா இடையேயான காதல் தருணங்களை அழகாக படம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.