தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
அடுத்த நாளான 28ஆம் தேதியன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பரபரத்த தேர்தல் களம்:
நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று முடிந்த நிலையில், தொகுதிவாரியாக இறுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். இந்த முறை ஒரு திருநர் கூட போட்டியிடவில்லை. வட சென்னையில் 35 வேட்பாளர்களும் தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் மத்திய சென்னையில் 31 பேர் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்களும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மதுரையில் 21 வேட்பாளர்களும் கோயம்புத்தூரில் 37 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அவர் உள்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.
சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்
இதையடுத்து சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் சார்பில் முதலில் பதிவு பெற்ற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். தொடர்ந்து சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். அந்த வகையில் சின்னங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன.
விசிக சார்பில் போட்டியிடும் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய இருவரும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதிமுக வேட்பாள துரை வைகோவுக்கு தீக்குச்சி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Lok Sabha Election: கேட்டது கிடைத்தது! பானை சின்னத்தில் களமிறங்கும் திருமாவளவன் – உற்சாகத்தில் விசிக!
மேலும் காண