actress navya nair puts up ‘pre-loved’ saris on sale Saree sale


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்த நவ்யா நாயர் சேலை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் நவ்யா நாயர். இவர் 2001 ஆம் ஆண்டு இஷ்டம்  என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் நவ்யா நாயருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 
இப்படிப்பட்ட நவ்யா நாயரை 2004 ஆம் ஆண்டு தனது அழகிய தீயே படத்துக்காக ராதாமோகன் தமிழுக்கு அழைத்து வந்தார். இப்படம் இடம் பெற்ற விழிகளின் அருகினில் வானம் பாடல் அவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து பாசக்கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 
இதற்கிடையில் சந்தோஷ் மேனன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்த நவ்யா நாயர் அதன்பின்னர் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த 14 ஆண்டுகளில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் ஜானகி ஜானே படம் வெளியானது. இப்படம் நவ்யா நாயரின் 2வது இன்னிங்ஸை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் புதிய தொழில் ஒன்றை செய்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திரைப்பிரபலங்கள் சினிமா தவிர்த்து பிற துறைகளில் முதலீடு செய்து தொழில் செய்வார்கள். ஒரு காலக்கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் தொழிலதிபர்களாக தங்கள் வாழ்க்கையை தொடர்வார்கள். அந்த வகையில் நவ்யா நாயர் தான் ஆசையாக வாங்கி போடாமல் வைத்திருக்கும் அல்லது ஒருமுறை உபயோகித்த சேலைகளை சமூக வலைத்தளம் பக்கம் மூலம் விற்பனை செய்து வருகிறார். 
“Pre-Loved by Navya Nair’ என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சேலைகளை விற்பனை செய்து வருகிறார். இதில் கைத்தறி புடவைகள் ரூ.2,500க்கும், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் ரூ.4,000 முதல் ரூ.4,600 வரையும், பனாரஸ் பட்டுப்புடவைகள் ரூ.4,500ல் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில புடவைகளில் பிளவுஸ் சேர்த்தும் விற்பனை செய்யப்படுகிறது. தனது பக்கத்தில் பதிவிடப்படும் சேலைகளை வாங்க நினைப்பவர்கள் கமெண்ட் அடிப்படையில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண

Source link