இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை மிகவும் பிரமாண்டமாக குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது.
இந்திய திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், முக்கிய புள்ளிகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விருந்து, கலை நிகழ்ச்சி என மூன்று நாட்களும் விழாக்கோலம் போல காட்சி அளித்தது ஜாம்நகர்.
பச்சன் குடும்பத்தினர், ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, ரஜினிகாந்த், அட்லீ, ராம் சரண் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மேடையில் நடனமாடினார்கள். மிகவும் பிரபலமான பாடகி ரிஹானா, அம்பானி வீட்டு திருமண விழாவில் நடனமாட பல கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பல விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக விமர்சனம் செய்யும் நடிகை கங்கனா ரனாவத், அம்பானி மகன் திருமண கொண்டாட்டம் குறித்து போஸ்ட் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“எத்தனை லட்சம் டாலர் கொடுத்தாலும் நான் திருமண நிகழ்ச்சிகளில் பாட மாட்டேன்” என மிகவும் பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கர் மறுத்த நிகழ்வை பகிர்ந்த கங்கனா ரனாவத் “நான் பண நெருக்கடியால் சிக்கி தவிக்கிறேன். லதா ஜீயும், நானும் ஏராளமான ஹிட் பாடல்களை வைத்து இருக்கிறோம்.
ஆனால் அதற்காக எத்தனை ஆசைகாட்டி தூண்டிவிட்டாலும் ஒரு போதும் நான் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடியது கிடையாது. எத்தனையோ குத்து பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் நான் தவிர்த்துவிட்டேன். புகழ் மற்றும் பணம் தேவையில்லை என சொல்வதற்கு வலிமையான பண்பும் கண்ணியமும் இருக்க வேண்டும்.
ஏராளமான குறுக்கு வழிகள் இந்த உலகத்தில் இருந்தாலும் நேர்மையான முறையில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத். அவரின் இந்த அதிரடியான பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் பிரபலங்கள் நடனமாடியதை கேலி செய்யும் வகையில் கங்கனா ரனாவத் இந்த போஸ்ட் பகிர்ந்துள்ளாரா என கேள்வி எழுப்பப்படுகிறது?
பொதுவாக அனைத்து பாலிவுட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் கங்கனா ரனாவத், அம்பானி இல்லத் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம், அவர் அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் காண