HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக உள்ள இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
சினிமா குடும்பம்
செல்வராகவன் பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா கஸ்தூரி ராஜா 90களின் காலக்கட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கஸ்தூரி ராஜா என பெயர் சொன்னால் அவரை தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்கள் தான். அப்படிப்பட்டவருக்கு மூத்த மகனாக பிறந்த செல்வராகவன் மற்றவர்களிடம் இருந்து சற்றே வித்தியாசப்பட்டவர். பொதுவாக திரைத்துறை சார்ந்த பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிகர் நடிகைகளாகவே வலம் வர விரும்புவார்கள். அல்லது தனது தந்தை, முன்னோர்கள் பங்களித்த துறையில் சாதிக்க நினைப்பார்கள்.

அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் செல்வராகவன் பெயருக்கு பதிலாக கஸ்தூரிராஜாவின் பெயர் இடம் பெற்று இருக்கும். முதல் படமே இளமைக்கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தி துள்ளுவதோ இளமை படத்தை வெற்றி பெற செய்தார். இந்தப் படத்தின் மூலமாகத்தான் செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
முத்தான படங்கள்
இதன் பிறகு காதல் கொண்டேன் படம் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவானது. கஸ்தூரிராஜாவின் மகன்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு நடிப்பில் தனுசும் இயக்கத்தில் செல்பவராகவனும் எப்பேர்பட்ட திறமைசாலி என்பதை வெளிப்படுத்தினர். மூன்றாவதாக செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி மிகவும் வித்தியாசமான காதல் படமாக அமைந்தது. இவர் தமிழ் சினிமாவில் கவனிக்கதக்க இயக்குநராக மாறிப்போனார். 
இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை எடுத்தார். அதுவரை தமிழ் சினிமா காணாத அரசியல் கலந்த கேங்ஸ்டர் படமாக இது அமைந்தது. சூழ்நிலையால் ரவுடியாகும் மனிதன், இறுதியாக அனைத்தையும் இழந்து அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதை அழகாக காட்டியிருப்பார். படம் ரிலீசான சமயத்தில் ஓடவே இல்லை. ஆனால் ரீ-ரிலீஸில் பட்டையை கிளப்பியது. இதேபோல் சோழர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட “ஆயிரத்தில் ஒருவன்” படமெல்லாம் கற்பனையின் பிரமாண்டமாக கண்களுக்கு விருந்தளித்தது.

இந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறாத நிலையில் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை  என உணர்வுகளுக்கு ஏற்ற படங்களை செல்வராகவன் கொடுத்து வருகிறார். 
தோல்விகளை கண்டு துவளா மனிதன்
செல்வராகவனின் சினிமா கேரியரை எடுத்துக் கொண்டால் அவர் இயக்கிய படங்களில் முக்கால் வாசி தோல்வி படங்களாகவே தான் இருக்கும். ஆனால் இவரின் கற்பனையின் உச்சம், உணர்வுகளின் வீரியம் எல்லா படங்களும் ரசிகர்களை பிரமிக்கவே வைக்கிறது. விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் நடிப்பில் கால் பதித்த செல்வராகவன் சாணிக்காயிதம், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பாடலாசிரியராகவும் ஒரு பக்கம் திரைத்துறையில் பங்காற்றி வருகிறார்.
மேலும் சமீபகாலமாக சமூக வலைத்தளப் பக்கங்களில் ஞானி போல் தத்துவமாக பொழிந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில ஆழ்த்தி வருகிறார். இப்படிப்பட்ட செல்வா தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவன் தான்.. அவருக்கு ஏபிபி நாடு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..!

மேலும் காண

Source link