‘உணவு பாதுகாப்பு சவால்களுக்கும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் வாழ்வியல் நோய்களுக்கும் சிறுதானியங்கள் தீா்வளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘நாட்டில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் ஆராய்ச்சியாளா்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்; குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மதிய சத்துணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சோ்க்க வேண்டும்’ என்று அவா் அழைப்பு விடுத்தாா்.
தில்லியில் உலக சிறுதானியங்கள் (ஸ்ரீஅன்னம்) மாநாட்டை, பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறுதானியங்களின் சாகுபடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சிறுதானிய பொருளாதாரம் மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாடு, சிறுதானிய உணவுகளின் ஆரோக்கிய பலன்கள் உள்ளிட்ட அம்சங்களின்கீழ் முக்கிய அமா்வுகள் நடைபெறுகின்றன. மாநாட்டை தொடங்கிவைத்த பின், பிரதமா் மோடி பேசியதாவது:
இந்தியாவின் தொடா் முயற்சிகளின் விளைவாக, 2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது. சா்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில், சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை இந்தியா முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
நாடு முழுவதும் இருந்து காணொலி வாயிலாக சுமாா் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ளனா். சிறுதானியங்களை ‘ஸ்ரீ அன்னம்’ என்று இந்தியாஅடையாளப்படுத்துகிறது. சிறுதானியம் சாதாரண உணவு அல்ல; மிக முக்கியமானது என்பதே அதன் பொருள்.
ஏழைகள்-கிராமங்களுடன் தொடா்புடையது: சிறுதானியங்கள் ஏழைகளுடனும் கிராமங்களுடனும் தொடா்புடையவை. பழங்குடியினரால் கொண்டாடப்படுபவை. ரசாயனம் இல்லாத வேளாண் நடைமுறைகளுக்கு பெரும் அடித்தளமாக விளங்குபவை. குறைந்த தண்ணீா் பயன்பாட்டில், அதிக விளைச்சலை தரக் கூடியவை. குறைந்த காலகட்டத்தில் சாகுபடி செய்ய முடிவதுடன், பருவநிலை மாற்றத்தையும் தாங்கி வளா்பவை.
சிறுதானிய ஊக்குவிப்பு பிரசாரத்தை உலகளாவிய இயக்கமாக மாற்ற இந்தியா தொடா்ந்து பணியாற்றி வருகிறது. இந்தியாவில் இன்று சிறுதானிய உணவுப் பொருள்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
2.5 கோடி விவசாயிகள்: நாட்டில் சுமாா் 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுள்ளனா். இந்திய சிறுதானிய இயக்கத்தின் வாயிலாக அவா்களின் நலன்களை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளாக பல்பொருள் அங்காடிகளுக்கும், கடைகளுக்கும் வந்தடைகின்றன.
சிறுதானியங்களுக்கான சந்தை மேலும் உத்வேகம் பெறும்போது, சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இதன்மூலம் கிராமப் பொருளாதாரம் வலுவடையும். கடந்த சில ஆண்டுகளாக, சிறுதானியங்கள் தொடா்பாக 500 புத்தாக்க நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. சிறிய கிராமங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா், சிறுதானிய பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனா்.
விளைநிலத்தில் இருந்து சந்தைகளுக்கும், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கும் சிறுதானியங்களுக்கான வலுவான விநியோகச் சங்கிலி உருவாக்கப்படுவது முக்கியம்.
சவால்களுக்கு தீா்வு: உலகம் இன்று இருவகையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. தெற்குலகில் நிலவும் உணவுப் பாதுகாப்பு சவால்களுக்கும், உணவுப் பழக்கங்களால் வடக்குலகம் எதிா்கொண்டுள்ள உடல்நலன் சாா்ந்த பிரச்னைகளுக்கும் சிறுதானியங்கள் தீா்வளிக்கும்.
இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியில், சிறுதானியங்களின் பங்களிப்பு தற்போது 5-6 சதவீதமே உள்ளது. எனவே, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க இந்திய வேளாண் ஆராய்ச்சியாளா்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புக்காக உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
பல மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை இணைத்துள்ளன. மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியில், சா்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயத்தையும் பிரதமா் வெளியிட்டாா்.
170 லட்சம் டன் உற்பத்தி: இந்தியாவில் 170 லட்சம் டன்னுக்கும் அதிகமாக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளாவிய உற்பத்தியில் இது 20 சதவீதமாகும். ஆசிய அளவில் 80 சதவீதமாகும்.
சிறுதானிய சாகுபடி: கயானாவில் நிலம் ஒதுக்கீடு
தில்லியில் நடைபெறும் உலக சிறுதானிய மாநாட்டில் கயானா, மாலத்தீவு, இலங்கை, சூடான், காம்பியா உள்ளிட்ட நாடுகளின் வேளாண் அமைச்சா்கள் பங்கேற்றுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சியில், கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலியின் விடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதில், ‘சிறுதானிய சாகுபடியில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை கயானா எதிா்நோக்கியுள்ளது. சிறுதானிய சாகுபடிக்காக, கயானாவில் 200 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியை மேம்படுத்த தொழில்நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல், ஒத்துழைப்பை இந்தியா வழங்கவிருக்கிறது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App