English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:7 Minute, 41 Second
சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளை ஒட்டி அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆக 17- ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி ஓராண்டுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.அதனடிப்படையில், கடந்த ஆண்டு (ஆக 2021 – ஆக 2022) சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை என்னும் கருப்பொருளில் தமிழகமெங்கும் பரவலாகப் பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தினோம். தோழமை கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர். அதற்கு முன்னதாக, பனை விதைகள் ஊன்றுவோம் என்னும் கருப்பொருளில் ஓராண்டு காலம் (ஆக 2020 – ஆக 2021) தமிழகமெங்கும் பனைவிதைகள் ஊன்றுவதை ஒரு வெற்றிகரமான மாபெரும் மக்கள் இயக்கமாக மேற்கொண்டோம். அதேபோல, இந்த ஆண்டிலும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளையும்அரசியல்படுத்துகிற அரும்பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.இவ்வாண்டுக்கான (ஆக 2022 – ஆக 2023) கருப்பொருளாக- “சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்; சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்”  – என முன்மொழிகிறோம். அதாவது, சனாதனிகளின் ஒற்றை முகமாக களத்தில் முன்னிற்கும் பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களைத் தேர்தல் அரசியல் மற்றும் கருத்தியல் அடிப்படையில் தனிமைப் படுத்துவோம் என்பதே இவ்வாண்டுக்கான கருப்பொருளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு ஓராண்டுக்கான செயல்திட்டங்களை வரையறுப்போம். மண்டலவாரியாக தமிழகத்திலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இக்கருப்பொருளில் மக்கள் இயக்கத்தை மேற்கொள்வோம்.இவ்வாண்டு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் சிறப்புக்குரிய ஆண்டாக மலர்கிறது. அதாவது, அறுபதாவது பிறந்தநாள் விழா என்பதால் இந்த ஆண்டு மணிவிழா ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. ஐம்பதாவது பிறந்தநாள் விழா (ஆக 2012) பொன்விழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அவ்விழாவினை முன்னிட்டு இயக்கத் தோழர்கள் மனமுவந்து கொடையளித்த பொற்காசுகளைக் கொண்டு வெளிச்சம் தொலைக்காட்சியைத் தொடங்கி (2016) நடத்திக் கொண்டிருக்கிறோம்.தற்போது அறுபதாம் அகவையை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மணிவிழாவில் இன்றைய முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தகைசால் தமிழர் பெரியவர் இரா.நல்லக்கண்ணு. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் கபிலன் ஆகியோர் பங்கேற்கும் கவியரங்கமும் நடைபெறுகிறது. திண்டுக்கல் ஐ.லியோனி, கல்கி பிரியன் ஆகியோர் தலைமையில் தனித்தனியே கருத்தரங்கம் நடைபெறுகிறது.பொன்விழாவைப்போல இந்த மணிவிழாவிலும் கட்சியின் வளர்ச்சிக்கென, வெளிச்சம் தொலைக்காட்சியை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்துவதற்கென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் முன்வந்து மனமுவந்து பொற்காசுகளாகவே கொடையளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இம்மணிவிழா ஆண்டினையொட்டி (2022 ஆக 17 – 2023 ஆக 17) ஓராண்டு காலத்திற்கு கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் என அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய அளவில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மற்றும் பிற சனநாயக சக்திகள் யாவரையும் சிதறவிடாமல் ஒருங்கிணைத்திட உரிய முயற்சிகளை முன்னெடுப்போம்.
மத அடிப்படையில் பெரும்பான்மைச் சமூக சங்பரிவார்களின் நலன்களை முதன்மைப்படுத்துகிற கருத்தியல் என்பதால், இந்துத்துவம் என்பதை சங்கத்துவம் என அடையாளப்படுத்துவதே பொருத்தமாகும். அதாவது, அக்கருத்தியலானது இந்துக்களின் நலன்களுக்கானது அல்ல; மாறாக சங்பரிவார்களான சனாதன சக்திகளின் நலன்களுக்கானதே ஆகும். எனவே, அவர்கள் பேசும் இந்துத்துவம் என்பதை நாம் சங்கத்துவம் என்றே அடையாளப்படுத்துவோம்.
சங்பரிவார்களைத் தேர்தல் களத்திலும் கருத்தியல் களத்திலும் வீழ்த்துவதன் மூலமே புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு தேசமான புதிய சனநாயக இந்தியாவைக் கட்டமைக்க இயலும். இல்லையேல், அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் அவர்களின் நோக்கம் நிறைவேறும். அதாவது, அவர்களின் மதவழி தேசியத்துக்கு எதிராக மத சார்பற்ற தேசியத்தைக் கட்டமைக்கும் அம்பேத்கர் சட்டத்தைச் சிதைக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கமென்பதைப் புரிந்துகொள்வோம்.புரட்சியாளர் அம்பேத்கரின் சட்டத்தைப் பாதுகாப்பதும் அவரது கனவு தேசத்தைக் கட்டமைப்பதுமே நம் முன்னுள்ள பெரும் சவாலாகும். அச்சவாலை எதிர்க் கொள்வோம். சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சங்கத்துவத்தை வீழ்த்தி சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்போம். இதுவே எனது அகவை அறுபதுக்கான அரசியல் அறைகூவல்!
சமத்துவம் உயர்த்துவோம்!- சனாதன சங்கத்துவம் வீழ்த்துவோம்! என திருமாவளவன் கூறியுள்ளார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.