கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரம், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி எஸ்.பியை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளியில் இருந்த கல்வி சான்றிதழ்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
வன்முறையாளர்களின் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர வாட்ஸ் அப் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் வதந்தியை பரப்பியதற்காக, இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் வாட்ஸ் அப் குழு மூலமாக போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடும் வரையில் போலீசார் கண்காணிப்பில் தவறியது ஏன் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்ததற்காக கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமாரை அதிரடியாக பணிஇடமாற்றம் செய்து அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவனை கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்தும், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக இருந்த செல்வகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
For more news update stay with actpnews.com
Android App Facebook Twitter Dailyhunt Share Chat Telegram Koo App
For more language news updates
தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ