இலங்கை போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூன்று பேருக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக, காவல்துறை செய்தித்தொடர்பாளர் அத்தியட்சகர் சிஹல் தல்துவ தெரித்துள்ளார்.
ரட்டா என அழைக்கப்படும் ரத்திது சேனாரத்ன, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார ஆகிய மூன்று செயற்பாட்டாளர்கள் கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக கூறினார்.
இந்த மூன்று கணக்குகளிலும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரத்திற்குப் பின்னர் வங்கிக்கு வந்த மூன்று பேரும், முழு தொகையையும் எடுத்துக் கொண்டு சென்றதாகவும், இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது அவர்களை மிரட்டிவிட்டு சென்றதாகவும் கூறினார்.
எந்த நாட்டில் இருந்து பணம் செலுத்தப்பட்டது? யார் செலுத்தியது? எதற்காக செலுத்தினார்கள்? வன்முறையை தூண்டவா? போராட்டத்தை ஊக்குவிக்கவா? என பல்வேறு கேள்விகள் குறித்து சிறப்பு புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
For more news update stay with actp news