தமிழகத்திற்கு எதிரான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் அனைத்து வார்த்தைகளும் பயன்படுத்தி திமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்போம் என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தினர் துவங்கவுள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத்சிங், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் அனைத்து கட்சி குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மற்றும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டி.ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா, நடைபெறவுள்ள மழைக்கால கூட்ட தொடரில் விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருட்கள் விலை தொடர் அதிகரிப்பு ஆகியவற்றை குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும் அதனை வைத்து தயாரிக்கும் பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகவே இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றான பாதுகாப்புத் துறையில் இதுவரை கேட்டிராத வகையில் புதிதாக “அக்னிபத்” எனும் திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் பணி செய்த பிறகு கண்துடைப்பிற்காக 25% பேர் மட்டும் பணியில் வைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நிலை சீரழிந்து உள்ள நிலையில் இதன் தாக்கம் இந்தியாவில் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளதா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்கரைனில் இருந்து இதுவரை 14 ஆயிரம் மாணவர்கள் இந்தியா திரும்பிவுள்ள நிலையில் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்திய மாணவர்களால் உக்ரைன் நாட்டிற்கு படிப்பிற்காக திரும்பி செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியா திரும்பிவுள்ள மாணவர்களின் பிரச்சனை கேட்பாரற்று கிடக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் உக்ரைனியில் இருந்து திரும்பிய மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும் இந்த பிரச்சனை குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் கடுமையான வீழ்ச்சி நாடு சீரலிய போகிறது என்பதற்கான அறிகுறி என்பதாலும் உணவுப் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவை குறித்தும், வனத்திருத்த சட்ட மசோதா நிறைவேற்றக்கூடாது மற்றும் இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது எனவும் வளாகத்தில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என நாடாளுமன்றம் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்திற்கு எதிராக ஏதேனும் விவாதங்கள் நடைபெற்றால் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி எதிர் குரல் கொடுப்போம் என தெரிவித்தனர்.