அதிமுகவில் தற்போது இருப்பது ஒரு நரி கூட்டம் ,வேறொரு கட்சி பிரச்சனையில் நான் தலையிட விரும்பவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கட்சி நிர்வாகிகளுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்ட பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய கூட்டம் முழுக்க முழுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வளர்ச்சி பற்றி தான் நடைபெற்றது என்றும் வேறு எதை பற்றியும் விவாதிக்க வில்லை என்றும் கூறினார். அதிமுக ஒற்றை தலைமை பிரச்சினை குறித்த கேள்விக்கு, வினை விதைத்தவன் வினை அறுப்பான். தப்பு செய்தவன் தண்டனை பெறுவான் ,நாங்கள் தினை விதைதவர்கள் நாங்கள் தினை அறுப்போம் என்று கூறிய அவர் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு அசிங்கம் என்று விமர்சித்தார்.
ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆரம்பித்தோம். நாங்கள் இப்போது அதிமுகவை மீடெட்டுக்க மாட்டோம். தேர்தலில் வெற்றி பெற்று தான் நான் அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று கூறினார். மேலும், வேறு ஒரு கட்சி பிரச்சனையில் நான் தலையிட மாட்டேன் என்றும் அம்மாவின் ஆட்சியை விரும்புபவர்கள், அம்மாவின் தொண்டர்கள், எம்ஜிஆரின் தொண்டர்கள் இருந்தால் எங்களுடன் வந்து இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக தானாகவே அழிந்து விடும் நிலையில் தான் தற்போது இருக்கிறது. பதவி வெறியால் சண்டை போடுபவர்கள் கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறினார். அம்மாவின் இன்னொரு கட்சி அழிந்து வருவதை எங்களால் பார்க்க முடியவில்லை. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்ற எம்ஜிஆர் பாடலின் வரிகளைக் ஏற்ப அவர்களாகவே திருந்த வேண்டும் கட்சியை தவறானவர்கள் கையில் நீதிமன்றம் கொடுத்து விட்டது. அதிமுக நன்றாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று கூறினார்.
மேலும் ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர் கட்சி சம்பதமாக எங்களுக்குள் எந்தவித நட்புணர்வும் இல்லை. ஓபிஎஸ் என் பழைய நண்பர் மட்டுமே என்று குறிப்பிட்டார்.
அதிமுகவின் தலைமையை தேர்தல் வைத்து தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சூழ்ச்சி செய்து நய வஞ்சமகா எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். இது அருவருக்க தக்க செயல். இராஜதந்திரி என்றால் நேர்மையாக இருக்க வேண்டும் எடப்பாடி அவ்வாறு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
அதிமுகவில் இன்றளவும் என்னுடைய ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள். எனக்கு ஒருத்தர் எதிரியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் தகுதியாக இருக்க வேண்டும். அதிமுகவில் இப்போது இருப்பது நரி கூட்டம். திமுக வெற்றி பெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பேன் என பொதுக்குழுவில் பேசி இருந்தேன். ஆனால் இது கேட்க வேண்டியவர்களுக்கு கேட்கவில்லை. வருகிற 2024 தேர்தலில் அமமுக யாருடைய பக்கம் என்பதை நிலையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று கூறினார்.