தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் அதற்கு முழுவதும் அடிமையாகி அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். இதில் பலர் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த தற்கொலைகள் தற்போது அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை காலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மாலை 6.45 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் 7.45 மணிக்கு நிறைவடைந்தது.
ஒரு மணி நேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கை குறித்து விவாதித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பான அவசர சட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.
மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவது, சில தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி அளிப்பது ஆகியவை பற்றியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள், நிறைவு விழாவில் அழைக்கப்பட வேண்டிய அகில இந்திய அளவிலான முக்கிய பிரமுகர் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 6-வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.