டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும், அடுத்து வரும் மாதங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்பதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழை நீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.