பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில் அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என இன்று நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு அறுதியிட்டு சொல்லியிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் துவங்கியதும், மேடையில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
அதை தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்கள் அவையில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்மொழிய, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் இந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார்.
அப்போது அரங்கில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாகவும், ஒற்றை தலைமை தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஒற்றை தலைமை தீர்மானத்தோடு எப்போது மீண்டும் பொதுக்குழு கூடுகிறதோ அப்போது தான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.
அதை தொடர்ந்து உயிர் நீத்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
அதை தொடர்ந்து தற்காலிக அவைத்தலைவராக இருந்து வரும் தமிழ் மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, தீர்மானம் நிறைவேறியது.
தொடர்ந்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் எனவும், கட்சியை வலுப்படுத்தும் விதமாக ஒற்றை தலைமை வழிநடத்த வழிவகை செய்ய வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் அளித்த கடிதத்தை வாசித்ததோடு, அடுத்த பொதுக்குழு கூடும் தேதியை அவைத்தலைவர் அறிவிக்க வேண்டும் என கோரினார்.
சி.வி.சண்முகத்தை தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.
அவரை தொடந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முற்பட்டப்போது ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் மேடையில் இருந்து எழுந்து புறப்பட்டதோடு மேடையில் வைத்தே இந்த பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஓ.பி.எஸ் மீது வாட்டர் பாட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பி.எஸ் சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களின் வாழ்த்துகளோடு மண்டபத்தில் இருந்து புறபட்டார்.
மீண்டும் அடுத்த மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். இருவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.