சென்னை: நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (மே 16) காலை 10 மணிக்கு நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசுகையில், ” இப்போது பி.ஏ, பிஎஸ்சி படிப்புகளில் சேர்வதற்குகூட ஒரு நுழைவுத்தேர்வு, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இவை தனியார் கோச்சிங் சென்டர்களை இல்லாமல் செய்யும் என்று கூறுகின்றனர். நீட் தேர்வாக இருந்தாலும், அது எந்த தேர்வாக இருந்தாலும், அவையெல்லாம் தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு வழிவகுத்து அவர்கள் கொள்ளையடிப்பதற்கு காரணமாக இருக்கிறதே தவிர மாணவர்களுக்கு வசதியாக இல்லை.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் தேவை மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அவர்களுக்கு பிஏ, பிஎஸ்சியாக இருந்தாலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசியலின் கொள்கை. அதைத்தான் தமிழக முதல்வர் படிப்படியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
இந்த விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி,பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி, தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App