திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சிறுகமணி பேரூராட்சி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பேட்டைவாய்த்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமைத் தொடங்கிவைக்க ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி வந்தார்.
இதையடுத்து, அவரை வரவேற்பதற்காக பேட்டைவாய்த்தலையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் இருந்து மாணவ, மாணவிகள் 25-க்கும் அதிகமானோர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில் சிலரிடம் எம்எல்ஏ-வை வரவேற்கும் வகையில் வரவேற்பு அட்டைகள் அளிக்கப்பட்டிருந்தன.
ஆனால், எம்எம்ஏ எம்.பழனியாண்டி திருச்சி மாநகரில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, முற்பகல் 11.20 மணியளவில் பள்ளிக்குச் சென்றார். இதனால், காலையிலிருந்து வெயிலில் மாணவ, மாணவிகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பிற வகுப்புகளுக்கு மே 13-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், மருத்துவ முகாமைத் தொடங்கிவைக்க வந்த எம்எல்ஏ-வை வரவேற்பதற்காக பள்ளி மாணவ- மாணவிகளை வரவழைத்து வெயிலில் காக்க வைத்தது பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களின் அலட்சியத்தைக் காட்டுவதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினியிடம் கேட்டபோது, “தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணிக்காகவே மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எம்எல்ஏ-வுக்கு வரவேற்பு அளிப்பதற்காக வரவழைக்கப்படவில்லை.
அதேவேளையில், பேரணியும் நடத்தப்படவில்லை. மாணவ, மாணவிகள் சிறிது நேரம் மருத்துவ முகாம் கொட்டகையில் இருந்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர்” என்றார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App