சென்னை: விசாரணை கைதிகள் மர்ம மரணம் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து நடந்த விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில்13 இடங்களில் காயங்கள் இருந்ததால், காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த வழக்கில் அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் இந்த தண்டனை போதாது. கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும். இல்லையென்றால் இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல் பெயரளவில் இல்லாமல், மக்களுக்கு உரிய பாதுகாப்பாக இருக்க வேண்டும். விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App