சென்னை: டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி: ” டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணி அளவில் மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் இன்னும் கூட சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், விபத்து நேர்ந்தபோது கட்டிடத்தின் 2-வது தளத்தில் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அந்த தளத்திலேயே அதிக உயிரிழப்பும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சோக சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் அக்கட்டிடத்தின் உரிமையாளரை மனீஷ் லக்ராவை போலீஸார் தேடி வருகின்றனர்.
தீவிபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்” என்று கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App