சென்னை: அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் வகையில், கேரள அரசை போல, அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு எழுதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவி வகிக்கும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர், தங்களை மாநில அரசின் சிவில் சர்விஸில் சேர்க்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர். 2008-ம் ஆண்டு அவர்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். மாநில சிவில் சர்விஸில் சேர்க்காததால் இந்திய ஆட்சிப் பணியான ஐஏஎஸ் அந்தஸ்தை பெற முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியர் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றை திருத்தம் செய்யாமல், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் உதவி இயக்குனர், இணை இயல்குனர், கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோரை மாநில சிவில் சர்வீஸில் சேர்ப்பது சாத்தியமில்லை. மாநில சிவில் சர்விஸின் கீழ் வராதவர்களில் 5 சதவீதத்தினரை நியமிக்க விதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருடன், குரூப் 1 தேர்வின் மூலம் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டவர்கள் சமமாக நடத்தபடாதது வருத்தத்திற்குரியது என்று வேதனை தெரிவித்தார். வருவாய் துறை அதிகாரிகள் மட்டும் 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்று விடும் நிலையில், பிற துறைகளில் உயர்ந்த பதவியில் இருந்தபோதும், இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்து கிடைக்க 30 ஆண்டுகள் ஆகிறது.
திறமையான அதிகாரிகளை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், கேரளாவில் உள்ளது போன்று தமிழகத்திலும் அனைத்து துறைகளின் குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, துணை ஆட்சியர் அந்தஸ்தில் வரக்கூடிய பதவிகளை கண்டறிவதற்கான குழுவை 6 மாதங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App