Last Updated : 14 May, 2022 04:10 AM
Published : 14 May 2022 04:10 AM
Last Updated : 14 May 2022 04:10 AM

குழந்தைகளைத் தாக்கும் ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ எனும் கண் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மே மாதம் ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மே 8-ம்தேதி முதல் ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘ரெட்டினோபிளாஸ்டோமா’ வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 வயது குழந்தைக்கு ஒரு கண்ணில் ஏற்பட்ட புற்றுநோய் தீவிரமடைந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து அந்த கண் முழுமையாக அகற்றப்பட்டது. இரண்டரை வயதுடைய மற்றொரு குழந்தைக்கு 2 கண்ணிலும் புற்று நோய் தீவிரமடைந்த நிலையில் சிகிச்சை நடைபெற்று வரு கிறது.
இந்நோயால் ஒரு கண்ணை இழந்த குழந்தைக்கு நேற்று 4-வதுபிறந்த நாள். இந்த பிறந்த நாளைகண் புற்றுநோய் விழிப்புணர்வு நாளாக கொண்டாட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில் டீன் டி.நேரு தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், அக் குழந்தைக்கு பரிசு வழங்கி மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியில் டீன் பேசியதாவது: ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ என்பது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் கண் புற்றுநோய். இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளை தான் தாக்குகிறது. பரம்பரையாக இந்த நோய் வரலாம். தற்போது பரம்பரையாக இல்லாமலும் இந்நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் பாதிப்பு இருந்தால் கண் பார்வை சரியாக தெரியாது. கண் முழி இடம் மாறி இருக்கும். சரியாக கவனித்தால் புகைப்படம் எடுக்கும்போது கண்களில் பிளாஷ் ஒளிப்பட்டு, அது சிகப்பு நிறத்தை பிரதிபலிப்பதைக் கவனிக்கலாம். மேலும் கண்களில் பிரதிபலிப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்களில் பூ விழுந்தது போன்று காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.
தொடக்கத்திலேயே கண்டறிந் தால் உரிய சிகிச்சைகள் மூலம் பார்வை இழப்பைத் தடுத்து கண்களை காப்பாற்றலாம். நோய்தீவிரமடைந்தால் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியாது. கண்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், கண் புற்றுநோய் மூளை புற்றுநோயாக பரவி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் குழந் தைகளின் கண்களை கவனமாக கவனிக்க வேண்டும். சிறிய பிரச்சினை தெரிந்தாலும் உடனே கண் மருத்துவரை அணுக வேண் டும் என்றார் அவர்.
உறைவிட மருத்துவ அலுவலர்சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், கண் சிகிச்சை பிரிவு தலைவர் குமாரசாமி, இணை பேராசிரியர் பெரியநாயகி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App