மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 22-ம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி இடம் பெறும். நிகழாண்டு இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார்.
இதற்கு பல்வேறு கட்சிகள், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவை பேரூர் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், விழுப்புரம் மயிலம் பொம்மபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் சந்தித்து பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி தர வேண்டுகோள் விடுத்தனர். அதன்பின்பு, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்தார்.
இந்நிலையில், ஞானபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் முன் எழுந்தருளினர். அதன்பின், வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், தருமபுர ஆதீன மடாதிபதி பங்கேற்றார்.
மே 18-ல் திருக்கல்யாணம், 20-ல்பஞ்சமூர்த்திகள் திருத்தேர், 21-ல் காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறுகின்றன.
விழா நிறைவாக 22-ம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கயிலைமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App