சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கிராம, வட்டார மற்றும்மாவட்ட ஊராட்சிகளை தேர்வு செய்து, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள் (தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சக்திகரன் புரஸ்கார்) திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த மண்மங்கலம், மதுரை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த சின்னப்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த அத்திக்காட்டுவிளை, கிருஷ்ணகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த கங்கலேரி, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்டாத்தி ஆகிய ஊராட்சிகளுக்கு கிராம ஊராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்துக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்துக்கான தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த துவார் கிராமத்துக்கும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த குஞ்சப்பனை கிராமத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். முதல்வர் அவர்களை பாராட்டி, மேலும் பல விருதுகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App