சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகளில் வினாத்தாள் பற்றாக்குறையால் ஒரு வினாத்தாளை வைத்து2 முதல் 3 மாணவர்கள் தேர்வுஎழுதுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கல்வியாளர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வுநடந்து வருகிறது. வினாத்தாள்கள் கல்வித்துறை சார்பில், மாவட்டஅளவில் தயாரித்து அனுப்பப்படுகின்றன.
வினாத்தாளுக்கு கட்டணம்
இந்நிலையில், பல பள்ளிகளில் வினாத்தாள்கள் பற்றாக்குறையாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு வினாத்தாளை வைத்து 2 முதல் 3 மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை உள்ளதாக புகார் கூறப்படுகிறது. தேர்வுக்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.30 கட்டணம் வசூலிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வினாத்தாள் பற்றாக்குறையாக அனுப்புவது மாணவர்கள், பெற்றோர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் வினாத்தாளுக்காக ரூ.30 கட்டணம் கேட்கின்றனர்.
ஆனால், 3 மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள் கொடுக்கின்றனர். 3 மாணவர்கள் அருகருகே அமர்ந்து எப்படி தேர்வை ஒழுங்காக எழுத முடியும்? இதற்கு தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி வழங்கி இருக்கலாம்.
மேலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2-வுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடந்தன. வினாத்தாள்களுக்காக 2 தேர்வுகளுக்கும் ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.80 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல, தற்போது பிளஸ்1-க்கு நடந்த ஒரு திருப்புதல் தேர்வுக்காக ரூ.50 வசூலிக்கின்றனர். கடைகளில் தரமான காகிதத்தில் நகல் எடுத்தாலே 50 காசு முதல் ரூ.1 தான் வாங்குகின்றனர். 6 பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் வினாத்தாள்கள் 20 பக்கம்தான் வருகிறது. அதுவும்வினாத்தாள் தரமில்லாத காகிதத்தில்தான் தயாரிக்கப்படுகிறது.
இதனால் கட்டணத்தை குறைக்கவும், வினாத்தாள்களை பற்றாக்குறை இன்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறும்போது, ‘‘பற்றாக்குறையுள்ள பள்ளிகளை கண்டறிந்து கூடுதலாக வினாத்தாள்களை அனுப்பி வருகிறோம்’’ என்று பதில் அளித்தார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App