Tue. Jun 28th, 2022
0 0
Read Time:7 Minute, 46 Second

சென்னை: கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம்

காட்டி ஒப்புதல் பெற்று தான் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது; இது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்காக ஏதேனும் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்களை அழைப்பதாக இருந்தாலும் கூட, அது குறித்து இரு வாரங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் முனைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தின் எட்டாவது அத்தியாயத்தின் 29வது பிரிவின்படி விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் – மாணவர்களின் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இத்தகையக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் தேவையில்லை. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான குறைகள் தலைவிரித்தாடுகின்றன; எண்ணற்ற முறைகேடுகள் நடக்கின்றன. அவை குறித்த உண்மைகளை பேராசிரியர்களும், மாணவர்களும் அம்பலப்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகத் தான் இத்தகைய கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்றாலும் கூட, அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. மாணவர் விடுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, சுகாதாரமற்ற உணவு, அசுத்தமான கழிப்பறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாயின.

பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்களை நியமிப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி, தமிழக அரசு நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்குக் கூட பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை. ஓய்வூதியப் பயன்களை வழங்க பல்கலைக்கழக கணக்கில் இருந்த ரூ.400 கோடியை ஊதியம் உள்ளிட்ட தேவைகளுக்காக செலவழித்து விட்ட நிர்வாகம், இப்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக பேராசிரியர்கள் செலுத்தியிருந்த நிதியை எடுத்து செலவழிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஊதியம் வழங்குவதற்கு கூட நிதியில்லாத நிலை ஏற்படலாம். இவை தவிர மேலும் பல குறைபாடுகள் இருப்பதால் அது குறித்து எவரும் விமர்சிக்கக்கூடாது என்பதற்காகவே இத்தகைய வாய்ப்பூட்டு உத்தரவை பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது.

இது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. அண்மைக்காலமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையை பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு எதிராக அங்கு மாணவர்கள் போராடிய போது, இதே போன்ற தடை பிறப்பிக்கப்பட்டது. இப்போது அதே நடைமுறையை காமராசர் பல்கலைக்கழகமும் மேற்கொண்டிருக்கிறது. மக்களிடம் எதிர்ப்பு எழும் போது இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்களின் வழக்கமாக இருக்கிறது. துணை வேந்தர் என்பதில் வேந்தர் என்ற வார்த்தை இருப்பதால், தங்களை மன்னர்களாக கருதிக் கொண்டோ, என்னவோ பல்கலைக்கழக துணைவேந்தர்களும் அண்மைக்காலமாக இத்தகைய அடக்குமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர்.

கல்வி நிலையச் சூழலுக்கு இது அழகு சேர்க்காது. தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான விதைகள் பல்கலைக் கழகங்களில் மாணவர்களால் தான் விதைக்கப்பட்டன. அவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதித்து பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது. அதனால், கருத்துச் சுதந்திரத்தை தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாறாக, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.