புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மே. 11) நடைபெற்றது. பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் கோரிமேடு சாலையில் பேரணியாக வந்து ஜிப்மர் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜிப்மரில் இந்தியை திணிக்காதே, தமிழை அகற்றாதே, இயக்குநரின் உத்தரவை திரும்ப பெறு என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர், பாமக மாநில அமைப்பாளர் கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜிப்மரில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் ஒரு சுற்றிக்கை விடுத்துள்ளார். இதற்கு உடனே பாமக நிறுவனர் ராமதாசும், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் கண்டனம் தெரிவித்தனர். ஜிப்மரில் ஆளுநர் வந்து ஆய்வு செய்துவிட்டு எல்லாம் பழைய நடைமுறையில் தான் உள்ளது என்றார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவேடுகளில் கூட இந்திதான் உள்ளது.
எந்த பாமரனும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இதனை செய்கின்றனர். இது தவறான முடிவு. இதை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தி மொழியையும், வடமாநிலத்தவரை பணியமர்த்துவதிலும் முனைப்பாக இருக்கின்றனர். ஜிப்மர் பணியாளர் தேர்வுக்கு வடமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கிறார்கள். இது புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை இழக்க செய்கிறது. இது தமிழ் மண். இங்கு இந்தியை திணிக்க முடியாது. எங்களுடைய உரிமைக்காக தலைமை அனுமதியோடு அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்துவோம்.” என்றார்.
நகலை எரித்து தமிழ் அமைப்புகள் போராட்டம்: இதேபோல் புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து தமிழர் தேசிய பேரியக்கம் சார்பில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகில் இருந்து இயக்கத்தின் தலைவர் வேல்சாமி தலைமையில் தமிழ் அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சிவக்குமார், தமிழர் களம் அழகர், தமிழ்மாறன், உலகத்தமிழ் கழகம் தமிழுலகன் தமிழ் தேசிய பேரியக்கம் அருணபாரதி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சுப்பையா திருமண மண்டபம் அருகே வந்தபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தமிழ் அமைப்புகள் ஜிப்மர் மற்றும் அதன் இயக்குநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஒரு பிரிவினர் இந்தி சுற்றறிக்கை நகலை எரிக்க முயற்சித்தனர். அதை போலீஸார் பறித்தனர். மற்றொரு பிரிவினர் ஜிப்மர் 2-வது நுழைவு வாயில் அருகே ஓடிச்சென்று நகலை எரித்தனர்.
இதனால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் 3 பெண்கள் உட்பட 30 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App