Mon. Jun 27th, 2022
0 0
Read Time:9 Minute, 23 Second

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வில், சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்தகட்டமாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அகழாய்வு நடக்க உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:

தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்து, உலகுக்கு அறிவிக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட சங்ககால துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ரோமானிய நாணயங்கள், மெருகூட்டப்பட்ட மண்பாண்டங்கள், அரேபிய தீபகற்பத்தைச் சார்ந்த அயலகப் பொருட்கள் மூலம், சங்ககாலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை நிறுவ முடிந்தது.

அதேபோல, அங்கே கிடைத்த அரியவகை சூதுபவள மணிகள், ஒளிர்மிகு நீலமணிகளைக் கொண்டு, கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளுடன் தமிழர்கள் உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானங்கள், தொல்பொருட்களின் செய்நேர்த்தி, தொழில்நுட்பத் திறன், பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில், சங்ககாலத் தமிழகத்தில் நன்கு முதிர்ச்சியடைந்த நகரப் பண்பாடு செழித்து வளர்ந்திருந்ததை உலகுக்கு அறிவிக்க முடிந்தது.

அதுமட்டுமின்றி கீழடி, கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டு என்று அறிவியல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு சிவகளை அகழாய்வின் போது கிடைத்த நெல்மணிகளை பகுப்பாய்வு செய்து, பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொல்லியல் துறை, அகழாய்வுகளை மேற்கொள்வதிலும், தொல்பொருட்களை ஆய்வு செய்வதிலும் காந்த அளவியல் பகுப்பாய்வு, ஆளில்லா வான்வழி ஊர்தி ஆய்வு, தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

அதேபோல, அகழாய்வுகளில் கிடைக்கும் தொல்பொருட்களை ஆய்வுசெய்ய, தொல் தாவரவியல், தொல் விலங்கியல், தொல் மரபணு ஆய்வு, சுற்றுச்சூழல் தொல்லியல், மண் பகுப்பாய்வு, உலோகவியல், கடல்சார் ஆய்வு போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்ற, புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு அறிவியல் வழி ஆய்வுகள் செய்யப்பட்டதில் கிடைத்த முடிவுகள்:

கீழடி அகரத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கு நெல் பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளில், அங்கு நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டதும் தெரிகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, கடந்த ஆண்டு தொல்லியல் துறையால், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில், 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப் பட்ட 2 கரிம மாதிரிகள், அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள்படி, அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து, வேளாண்மை செய்யும் போக்கு உருவாகியுள்ளது.

அந்தவகையில், தமிழகத்தில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்த கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைத்துள்ளது.

இந்தியாவில், இரும்புகாலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகா உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள முடிவுகளான, 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டதே, காலத்தால் முந்தியது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்.

அதேபோல, கருப்பு-சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் அறியமுடிகிறது.

இந்த இரும்புக்காலம் குறித்த முக்கியமான கண்டுபிடிப்பை தலைசிறந்த வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.

வெளிநாடுகளிலும் அகழாய்வு

தமிழக தொல்லிய துறையின் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம் பதித்த நாட்டின் பிற பகுதிகள், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடகாவின் தலைக்காடு, ஆந்திராவின் வேங்கி, ஒடிசாவின் பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

அதேபோல, கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதல்கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்யும் திட்டத்தை தொல்லியல் துறை இந்த ஆண்டு முதல் மேற்கொள்ளும்.

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நிறுவுவதே அரசின் தலையாய கடமை. தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, தொடர்ச்சியை உலகறியச் செய்ய தொடர்ந்து உழைப்போம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.