சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நடத்துவது தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஆதீன குருமார்கள் தெரிவித்தனர்.
தருமபுரம் ஆதீனத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளது.
இந்த தடையை நீக்கும் படி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சூழலில், எப்படியாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்து பட்டினப் பிரவேசம் தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப்பின் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வருடனான சந்திப்பின் போது, தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தநிலையிலும் கவலைப்படாமல் இருப்பதற்கான ஆறுதலை முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.
வரும் காலங்களில் இதில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி சுமுகமாக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்கள் கலந்து பேசி தருமபுர ஆதீன குருமகா சந்நிதானத்துடன் பேசி தீர்வு காண்போம்.
இந்த ஆண்டு மரபுபடி அனைத்து நிகழ்வும் நடைபெறுவதற்கு, விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் வாக்களித்துள்ளார்.
இந்த நிகழ்வு இதுவரை தடைபடாமல் நடைபெற்றுள்ளது. கரோனா காலத்தில் மட்டும் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இது சமயம் தொடர்பான நிகழ்வு. ஆகவே இது வழக்கம் போல் நடைபெற ஒத்துழைப்பு நல்குவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். முதல்வரும் ஆவன செய்வதாக கூறியுள்ளார். இந்த விழா இந்த ஆண்டு வழக்கம் போல் சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்வில், அரசியல் தலையீடோ, பிற குறுக்கீடோ அவசியமில்லை. அரசு, ஆதீனங்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்த உள்ளோம்’’என்றார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App