உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2020 செப்டம்பர் 22-ம் தேதி விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது உடுமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வள்ளிநாயகம், முருகானந்தம், ஈஸ்வரசாமி ஆகியோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பார்வையிட அனுமதி கோரி மனு அளித்தனர்.
இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் திரண்டு, அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாக கூறி உடுமலை காவல் நிலையத்தில் 3 பேர் மீது புகார் அளித்தனர். தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளின்படி, தேவையான அரசு ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வழிவகை இருந்தும், அதை ஆய்வு செய்ய மின்வாரிய அதிகாரிகள் மறுப்பதாக கூறி, 3 பேரும் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், மின்வாரிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்யவும், பதிவேடுகள், கோப்புகள், ஆவணங்களை பார்வையிடவும், தேவைப்படும் தகவலை குறிப்பிட்டு 100 பக்கங்களுக்கு மிகாமல் கட்டணமின்றி ஒளி நகல் (ஜெராக்ஸ்) எடுத்து சான்றொப்பமிட்டு மனுதாரருக்கு வழங்கவும் மாநில தகவல் ஆணையர் மு.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து உடுமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வள்ளிநாயகம், முருகானந்தம் ஆகியோர் கூறும்போது, “மாநில ஆணையரின் உத்தரவு தங்களுக்கு நேற்று (மே 7) வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அலுவலக வேலை நாளில் சென்று மின்வாரிய அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு மாறாக, பொது தகவல் அலுவலர் தகவல் வழங்க மறுக்கும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சராசரி குடிமகனுக்கு அளிக்கப்பட்ட விதிகளின்படி தகவல் கேட்டதற்காக, எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறோம்’ என்றனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App