திருவாரூர்: கலவரத்தை தூண்டும் விதமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செண்டலங்கார ஜீயர் பேசி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் திராவிட கழகம் மற்றும் திமுக-வினர் புகார் மனு அளித்துள்ளனர்.
தருமபுரம் ஆதினம் வரும் 22-ம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி வைத்துள்ளார். அப்போது, அவரை பக்தர்கள் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வார்கள். இதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர், ஆதினத்துக்கு கடிதம் அளித்துள்ளார். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோவில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிடச் சென்ற மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது’ என கூறியுள்ளார். ஜீயரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தனர். அதுபோல், திமுக வழக்கறிஞர்கள் இளஞ்சேரன், வீரக்குமார் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.
அந்த மனுக்களில், அமைச்சர்கள் சாலையில் நடைமாட முடியாது எனக் கூறி, வன்முறையை தூண்டும் விதத்தில் மன்னார்குடி ஜீயர் பேசியுள்ளதாகவும், கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து மக்களிடையே மதப் பிரிவினையை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசிவருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மன்னார்குடி ஜீயர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App