சென்னை: மதுக்கடையை மூடக் கோரி பாமக ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் பாமக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பாமக ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால், போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல.
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பாமக மாவட்ட பொருளாளர் ஆயிஷா போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டதற்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணம் ஆகும். சர்ச்சைக்குரிய மதுக்கடை, பாமக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் மூடப்பட்ட 3,321 மதுக்கடைகளில் ஒன்றாகும். பின்னர், உச்சநீதிமன்றம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டது. அந்த மதுக்கடையால் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் கணக்கில் அடங்காதவை.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது மிகவும் முக்கியமான இடமாகும். அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் தேவைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள். அதற்கான சூழலின் முக்கிய அம்சம் அந்தப் பகுதியில் மதுக்கடைகள் எதுவும் இல்லாமல் உறுதி செய்வது தான். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு எதிரில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் 3 முறை பாமக சார்பில் முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று முறை போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. அந்தப் போராட்டங்கள் ஆயிஷா தலைமையில்தான் நடத்தப்பட்டன. கடைசியாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாமக அலுவலகத்திற்கு வந்த காவல் ஆய்வாளர்கள், அடுத்த ஒரு வாரத்திற்குள் மதுக்கடை மூடப்படும் என உறுதியளித்தனர்; ஆனால், அது நடக்கவில்லை.
சர்ச்சைக்குரிய மதுக்கடைக்கு அருகில், இரு நாட்களுக்கு முன், சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் அங்கு மது குடித்து விட்டு வந்த சிலர் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். அதற்குக் காரணமான மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்திதான் தனி ஆளாகச் சென்று ஆயிஷா போராட்டம் நடத்தியுள்ளார். மதுக்கடையை மூட வேண்டும் என்ற உணர்வின் மேலோட்டத்தில், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்து கொள்ளவும் துணிந்துள்ளார். இதில் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிஷாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு, இப்போது நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
பாமக பொது நலனுக்காக எதையும் செய்யத் துணிந்த தொண்டர்கள் நிறைந்த இயக்கம் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், அத்தகைய தொண்டர்கள் பாமக-விற்கு மிகவும் தேவையானவர்கள்; தீக்குளிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி தீரம் மிக்க தொண்டர்களை
இழக்க விரும்பவில்லை. அதனால், பாமக தொண்டர்கள் இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
பாமக-வின் முதன்மை நோக்கங்களில் ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு சொட்டு தண்ணீர் வீணாக கடலில் கலக்காத தமிழகத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று தான் கேட்பேன் என ராமதாஸ் பலமுறை கூறியிருக்கிறார். அதற்காகத் தான் ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
பாமக தொடங்கப்படுவதற்கு முன்பாக 1984ம் ஆண்டிலேயே மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை ராமதாஸ் நடத்தினார். 1989ம் ஆண்டு பாமக தொடக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். பாமக தொடங்கப்பட்ட பிறகு 01.11.1989 அன்று நடத்தப்பட்ட முதல் போராட்டமே மதுவிலக்கு கோரும் அறப்போராட்டம் தான். அதன்பின் மதுவிலக்கை வலியுறுத்தி மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம், ஒப்பாரி போராட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை பாமக நடத்தி உள்ளது.
மற்றொருபுறம் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளை மூட வைத்தது. தமிழகத்தில் இன்று மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதற்கும், மது வணிக நேரம் குறைக்கப்பட்டிருப்பதற்கும் பாமக நடத்திய அரசியல், சட்டப்போராட்டங்களே காரணம். மீண்டும் சொல்கிறேன்…. தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தலையாயப் பணியாகும். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பாமக அறிவிக்க உள்ளது. மதுவை ஒழித்து, மக்களைக் காக்க எந்த தியாகத்திற்கும் பாமக தயாராக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App