ஓசூர்: உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள ஏரிகள், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், காப்புக்காட்டில் உள்ள புல்பூண்டு, செடிகொடிகள், மரம் உள்ளிட்ட அனைத்து வகையான தாவரங்களும் துளிர் விட தொடங்கியுள்ளதால், வனத்தில் கோடையில் ஏற்படும் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு பசுமைக்கு திரும்பி உள்ளது. ஓசூர் வனக்கோட்டத்தில் கடைகோடியில் அமைந்துள்ள வனச்சரகமாகவும், கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ள வனச்சரகமாகவும், உரிகம் வனச்சரகம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இந்த உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் அடங்கி உள்ளன. இந்த காப்புக்காடுகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வறட்சி அதிகரித்து கடும் வெயில் காரணமாக ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகும்.
இந்த காட்டுத் தீயில் இருந்து அரியவகை வனவிலங்குகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் வனத்தில் ஏற்படும் தீயை தடுப்பதற்காக தீயணைப்பு துறை ஒத்துழைப்புடன் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உரிகம் வனச்சரகத்தில் நடப்பாண்டில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக வனத்தில் பசுமை அதிகரித்து வருவதால் நடப்பாண்டு கோடை வெப்பத்தில் காட்டுத்தீ ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது, உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிக்கல், தக்கட்டி உள்ளிட்ட 6 காப்புக்காடுகளிலும் கோடை மழை கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பெய்து வருகிறது.
காப்புக்காடுகளில் உள்ள ஏரிகள், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக வனப்பகுதியில் கோடையில் நிலவும் வெப்பமான வறட்சித் தன்மை மாறி குளிர்ச்சியான காற்று வீசுகிறது. மேலும் காப்புக்காடுகளில் மழைக்காலம் போன்று பசுமை திரும்ப தொடங்கி உள்ளது.
வனத்தில் உள்ள புல்பூண்டுகள், செடிகொடிகள், மரங்கள் என அனைத்து வகை தாவரங்களும் துளிர் விட்டு, திரும்பிய பக்கமெல்லாம் காப்புக்காடுகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால் வனவிலங்குகள் காட்டுத் தீயின் அச்சமின்றி வனப்பகுதியில் வலம் வரத் தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App