சென்னை: தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை அமைச்சர் ஆய்வு செய்து தரமில்லாத பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் இயக்கப்படும் காலாவதியான அரசுப் பேருந்துகளை திரும்பப் பெற்று, புதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலாவதியான அரசுப் பேருந்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஏற்கெனவே தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி காலாவதியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரசுப் பேருந்துகள் ஓட்டை, உடைசலான நிலையிலேயே இயக்கப்படுகின்றன. பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழை பெய்யும் நாட்களில் பயணம் செய்யும் பயணிகள் மழையில் நனைந்தவாறே செல்லும் நிலை உள்ளது. மேலும் மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணம் செய்கின்றனர். அரசுப் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் மிகவும் பழுதடைந்து மூடிய நிலையில் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஐந்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தரமில்லாத பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App