சென்னை: “மகளிர் கல்லூரி என்று ஏற்படுத்துவதைவிட, இருபாலரும் சேர்ந்துபடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத்தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில இடங்களில் மாணவிகளுக்கு தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் முக்கியமாக வரும்போது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். முன்னதாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர், செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில், இளவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் மகளிர் கல்லூரி அமைத்துத் தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு[ பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ஏற்கெனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசியிருந்தேன். ஷிஃப்ட் முறை கொண்டுவந்து மகளிருக்கு தனியாக இடம் கொடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அதற்கு இன்று ஒரு பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ளனர். பெண்கள் ஆண்களைப் பிரித்து ஷிப்ட் முறையெல்லாம் கொடுக்கக்கூடாது. பெரியார் கொள்கையின்படி இருபாலரும் சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதைத்தான் கூறினர்.
எனவே மகளிர் கல்லூரி என்று ஏற்படுத்துவதைவிட, இருபாலரும் சேர்ந்து படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத்தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில இடங்களில் மாணவிகளுக்கு தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் முக்கியமாக வரும்போது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும். கள்ளக்குறிச்சியில் அந்த அவசியம் எழவில்லை” என்று கூறினார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App