புதுச்சேரி: “அந்நிய முதலீடு, வர்த்தகத்தை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர், உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர் பிரதமர் நரேந்திர மோடி” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் 39-வது வணிகர் தினவிழா, புதுச்சேரி ஏஎப்டி திடலில் இன்று (மே. 5) நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆண்டுவிழா மலரை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியது: ”ஆங்கிலேயேர் அடக்குமுறை இருந்த காலத்தில் பாரதியார் சுதந்திர போராட்டத்தை தொடங்க புதுச்சேரி வந்தார். அதேபோல் இந்தியா முழுவதும் அடுக்குமுறை இருக்கிறது என்று அரவிந்தர் புதுச்சேரி வந்தார். ஆஷ் துரையை சுட்டுக்கொல்வதற்கு முன்னாள் வாஞ்சிநாதன் புதுச்சேரியில்தான் பயிற்சி பெற்றார். எப்போதெல்லாம் நமக்கு பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் தாயின் மடியை தேடிச் செல்வோம். அதுபோல புதுச்சேரி எல்லோருக்கும் தாய் மடியாக இருக்கிறது. எளிய மக்களை தாங்கிப் பிடிப்பவர்கள் சிறு வணிகர்கள்தான்.
சுதர்சன அன்கோ போன்ற கம்பெனிகள் எல்லாம் கடையடைப்பு நடத்தியபோது, காமராஜரின் கோரிக்கையை ஏற்று சிறு வணிகர்கள், கடையடைப்பினால் துன்பம் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்கினர். இதனால்தான் அவர்களின் வீட்டுகளில் அடுப்பு எரிந்தது என்பதை சரித்திரம் சொல்கிறது.
அந்நிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றை தடுத்து நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை சாரும். பிரதமர் மோடி உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர். குடும்பத்துக்கு ஒரு மருத்துவர் இருப்பதுபோல தெருவுக்கு ஒரு சிறு வணிகர் இருக்க வேண்டும். அவர்கள் நம் குடும்பத்தை பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கரோனா காலத்தில் ஊரடங்கை அமல்படுத்தாமல் சிறு வணிகர்களை புதுச்சேரி அரசு பாதுகாத்தது” என்று ஆளுநர் தமிழிசை பேசினார். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App