Sat. Jul 2nd, 2022
0 0
Read Time:7 Minute, 10 Second

பொள்ளாச்சி: உலகில் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினி பூச்சிகள் நடத்திய ஒளி நடனம் ‘அவதார்’ படத்தை மிஞ்சும் அளவுக்கு கண்கவர் காட்சியாக அமைந்திருந்தது. ஹாலிவுட் படமான அவதாரில் வரும் பயோலுமினசென்ட் உலகம் கற்பனையானதாக இருக்கலாம். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடந்த அந்த நிகழ்வு உண்மைதான்.

ஒவ்வோர் ஆண்டும் கோடையில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சேர்ந்து இரவில் ஒரே நேரத்தில் ஒளிரும் அந்த நிகழ்வு அழகிய வனப்பகுதியைப் பச்சைக் கம்பளமாக மாற்றுகிறது. அப்படி ஓர் அபூர்வ நிகழ்வு இந்தாண்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நிகழ்ந்தது.

கடந்த மாதம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராமசுப்ரமணியன், துணை இயக்குநர் எம்.ஜி. கணேசன், ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சிகள் ஆராய்ச்சி நிபுணர் ஸ்ரீராம் முரளி ஆகியோர் உலாந்தி வனச்சரகத்தில் ஒரு பெரிய மின்மினி பூச்சிகள் கூட்டத்தின் ஒத்திசைவு ஒளிர்வைக் கண்டனர்.

கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் காடு முழுவதும் தங்கள் ஒளியை உமிழ்ந்த படி ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தன. ஒரு மரத்தில் ஒளி மின்னியதை அறிந்து, அடுத்த மரத்தில் உள்ள லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகள் ஒளிர ஆரம்பித்து காடு முழுவதும் இந்த தொடர் ஒளி ஓட்டத்தை கடத்திக் கொண்டு இருந்தன. இந்த நிகழ்வு இரவு முழுவதும் தொடர்ந்தது. மின்மினிப் பூச்சிகளின் இந்த ஒளி வெள்ளத்தால், சில மரங்கள் கருப்பு நிறத்தில் காணப்பட்டன. ஒவ்வொரு மரமும் வெவ்வேறு ஒளிரும் மாதிரிகளைக் கொண்டிருந்தன. இதனால் காடு முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மின்னியது.

இந்தநிகழ்வு குறித்து ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சி ஆராய்ச்சி நிபுணர் ஸ்ரீராம் முரளி கூறும்போது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் ஆண் மின்மினிப் பூச்சிகள் இந்த ஒளிக்காட்சிகளை வைத்து, தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டறியும். காட்டில் சம எண்ணிக்கையிலான பெண் மின்மினி பூச்சிகளும் இருக்கக் கூடும். அவை ஒளிரும் தன்மை மற்றும் இறக்கையற்றதாக இருக்கலாம். தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை லார்வாக்களாகக் கழிக்கும் அவை மென்மையான மண்புழு, நத்தை உள்ளிட்ட பூச்சிகளை உண்கின்றன. வளர்ந்த மின்மினி பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை தேன் மற்றும் மகரந்தத்தை உணவாக உட்கொள்கிறது.

கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் இந்த மிகப்பெரிய கூட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனம், சுற்றுச்சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக மின் ஒளி விளக்குகள், இரவு சுற்றுலா, அணை கட்டுமானங்கள், குடியிருப்பு மற்றும் வாகன இயக்கம் ஆகியவை இல்லாதது மின்மினிப் பூச்சிகளின் பெரும் எண்ணிக்கைக்கு உதவுகின்றன.

மின்மினிப் பூச்சிகள் தங்கள் வயிற்றின் கீழ் பிரத்யேக ஒளி உறுப்புகளைக் கொண்டுள்ளன, அவை ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கின்றன. சிறப்பு செல்களுக்குள், ஆக்ஸிஜன் லூசிஃபெரின் என்ற பொருளுடன் இணைந்து ஒளியை உருவாக்குகிறது. மின்மினிப் பூச்சிகளின் ஒளி நூறு சதவீதம் செயல்திறன் கொண்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 1999-ம் ஆண்டு மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நடந்துள்ளது அமெரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சி விஞ்ஞானிகளுடனான தகவல் தொடர்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2012-ம் ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனத்தை கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சிகள் உள்ளன. ஆனால், ஒரு சில மட்டுமே ஒத்திசைவானவை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா (Abscondita) இனத்தைச் சேர்ந்தவை அல்லது புதிய இனமாகவும் இருக்கலாம். அதன் இனத்தை சரியாக அடையாளம் காண விரிவான ஆராய்ச்சி மற்றும் டிஎன்ஏ வரிசைமுறை தேவை. இவை கருப்பு நிற கோடுகளுடன் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளன. சிக்கலான வடிவங்களுடன் வட்டமான கண்கள் மற்றும் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை.

இந்த கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நீண்ட காலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வனப்பாதுகாப்பின் காரணமாக உருவானது. உலகம் முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் இந்த மிக அரிதான இந்த ஆபூர்வ நிகழ்வு நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.